சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.49 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 309 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாகப் பேசிய ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.கணேசன், திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“ராமநாதபுரத்தில் மட்டும் பெரிய அளவிலான ஏழுவேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்,” என்றார் அமைச்சர் சி.வி.கணேசன்.