தஞ்சை: தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதை அடுத்து கடந்த ஆண்டைவிட குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட ஏறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி கைவிடப்பட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
அணையில் போதுமான நீர் இல்லாததே இதற்குக் காரணம். இதனால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரமுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே குறுவைப் பருவ நெல் சாகுபடியைத் தொடங்கினர். ஆற்றுப் பாசன விவசாயிகள் சாகுபடியைக் கைவிட்டனர்.
டெல்டா மாவட்டங்கள் சாகுபடி பணிகள் இன்றி அமைதியில் மூழ்கியுள்ளதால், ஏறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
நிலத்தடி நீரை மட்டுமே நம்பி, அதிகக் கடன் வாங்கி ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நாற்று நட்ட விவசாயிகள், தற்போது பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றனர்.
நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு, சில பகுதிகளில் தண்ணீர் உவர்நீராக மாறத் தொடங்கியுள்ளது. இதனால், நடவு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன இளம்பயிர்கள், தண்ணீரின்றி காய்ந்துக் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் ஏறக்குறைய 5.66 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி, இந்த ஆண்டு வெறும் 3.68 லட்சம் ஏக்கராகச் சுருங்கியுள்ளது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வழக்கமான 75,000 ஏக்கருக்குப் பதிலாக, வெறும் 4,300 ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சூப்பர் எல்நினோ தாக்கமும், தென்மேற்குப் பருவமழையின் ஏமாற்றமும் விவசாயிகளின் சிரமங்களை மேலும் அதிகரித்துள்ளன. அறுவடைக்குத் தயாராக உள்ள சிலரின் நிலையைத் தவிர, பெரும்பாலான இடங்களில் பயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த கட்டமான சம்பா மற்றும் தாளடி சாகுபடியைத் தொடங்கவும் விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டுவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் அளித்துள்ளது.


