தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எங்கள் எதிரி திமுகதான்: விஜய்

2 mins read
8774b989-60dc-4bec-a306-b7325b576b0d
தவெக தலைவர் விஜய். - படம்: ஊடகம்

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் போட்டி என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் விஜய் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக-பாஜக இடையே மறைமுகக் கூட்டணி இருப்பதாகவும் அதிமுக-பாஜக இடையே நேரடி நிர்ப்பந்தக் கூட்டணி இருப்பதாகவும் அவர் சனிக்கிழமை (ஏப்ரல் 11) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுக-பாஜக கூட்டணி ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “மக்கள் விரோத கூட்டணிக் கணக்குகளுக்குத் தமிழக மக்கள் 2026 சட்டசபைத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து, தூக்கி எறியப் போவது உறுதி.

“குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூட தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும் மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள்; உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.

“மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதல்வரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும்.

“ஆனால் இங்கோ ஊழல் செய்தவர்மீது நடவடிக்கை பாயும்போது உடனடியாக அவர் டெல்லி சென்றால், அவர்மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும்.

“இது போன்ற பல செயல்பாடுகள், பாஜக- திமுக மறைமுகக் கூட்டு என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளன.

“திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில் தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்கக் கூட்டாளியாக பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சரியமில்லை.

“2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தாங்கள்தான் திமுகவிற்கு எதிரான ஒரே அணி என்று பாஜகவும் பாஜகவிற்கு எதிரான அணி தாங்கள்தான் என திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர்.

“தமிழக மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர்.

“இனி திமுகவும் பாஜகவும் எத்தகைய வேடங்களையும் பூண்டு நாடகங்களை நடத்த இயலாது,” என்று விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்