ஒற்றைச் சூரியனும் இல்லை; இரட்டை இலையும் இல்லை

ஒற்றைச் சூரியனும் இல்லை; இரட்டை இலையும் இல்லை

2 mins read
45df9ab7-4a49-4619-a50b-461af981bdde
பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் குறுகியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தினமலர்

இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதும் களம் எப்போதும் சூடாக இருக்கும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று தோழமைக் கட்சியுடன் மோதும்போது அந்தளவுக்கு வேகம் இருக்காது.

அதிலும், அதிமுக, திமுக இல்லாத களத்தில் கூட்டணிக் கட்சிகள் நேருக்கு நேர் மோதும்போது பரபரப்பு குறைவாகவே இருக்கும். நான்கு முனை என்னும் கடும்போட்டி நிலவும் 2026 தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகள் மட்டும் மோதக்கூடிய 21 தொகுதிகள் உள்ளன. உதயசூரியனையும் இரட்டை இலையையும் அவற்றில் காணமுடியாது.

இந்த இரு சின்னங்களும் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை இந்தத் தேர்தலில்தான் அதிகம். 2021 தேர்தலில் இந்த எண்ணிக்கை 11 ஆக இருந்தது. 20 முதல் 25 விழுக்காடு வரையிலான சொற்ப வெற்றிகளை எதிர்பார்த்து களம் கண்டிருக்கும் தவெகவும் நாம் தமிழர் கட்சியும் இந்த 21 தொகுதிகளில் பலனடைவதற்கான வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.

தொகுதிக்கேற்ற வகையில் பிரசார உத்தியை மாற்றினால் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை இந்த இருகட்சிகளும் பெறமுடியும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. கூட்டணிகளுக்குள் உள்ள அதிருப்தியையும் அவை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு தொகுதியிலும் 5,000 முதல் 20,000 வரையிலான வாக்குகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடும் என்று கருதித்தான் 12க்கும் மேற்பட்ட கட்சிகளை திமுக கூட்டணியில் இணைத்துள்ளார் மு.க. ஸ்டாலின்.

2021 தேர்தலைப்போல் அல்லாமல் 2026 தேர்தல் களம் விஜய்யின் வருகையால் கடுமையாகி உள்ளது. 20,000, 30,000 மற்றும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் பலர் வென்றதைப் போன்ற நிலை இப்போது இருக்காது. வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறுகியதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வலுவான கட்சிகள் இல்லாததால் எளிதில் வெல்லலாம் என்றும் கருதிவிட முடியாது. தளி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்து வருகிறது. மூன்று முறை அந்தக் கட்சி அங்கு வென்றுள்ளது.

அதேபோல, விருத்தாச்சலம் தொகுதியில் 2006, 2011 தேர்தல்களில் விஜயகாந்த் வெற்றிபெற்று வாக்கு வங்கியை சேர்த்து வைத்துள்ளார். 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவரது மனைவி பிரேமலதா இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

காட்டுமன்னார்கோவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோட்டை. அங்கு அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் களமிறங்கி உள்ளார் .மேலும், 21 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகள் தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. நான்கு முனைப் போட்டியில் மூன்றாவதாகவும் நான்காவதாகவும் உள்ள கட்சிகள் கடுமையாகப் போராடி இந்த 21 தொகுதிகளில் ஒருசிலவற்றில் வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகளுக்கு மட்டும் மற்ற கட்சிகள் ஆசைப்படக்கூடாது. 1950களில் அந்த இரு தொகுதிகளும் உருவாக்கப்பட்டது முதல் திமுகவும் அதிமுகவும் வெற்றிபெறாத தொகுதிகள் அவை. கேரளாவை ஒட்டி உள்ளதால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தாக்கம் அவற்றில் பெருமளவு உண்டு. -திருநா

குறிப்புச் சொற்கள்