சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் சுமார் 20.7 விழுக்காட்டினர் இளம் வாக்காளர்களாக உள்ளனர்.
அந்த இளையர்கள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றியின் போக்கை மாற்றும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளதாகத் தேர்தல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி ஆகும். அவர்களில் 18-19 வயதுடையோர் 12.51 லட்சம் பேர். அதாவது முதல்முறை வாக்களிக்க உள்ளவர்கள் அவர்கள். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் அவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 2.2 விழுக்காடு.
அதற்கு அடுத்த வயதுப் பிரிவான 20க்கும் 29க்கும் இடைப்பட்ட வாக்காளர்கள் 1.05 கோடிப் பேர் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் அவர்களின் விகிதம் 18.5.
ஆக, இந்த இரண்டு வகையான வயதுப் பிரிவினரையும் சேர்த்துப் பார்க்கையில் 30 வயதுக்குட்பட்ட 1.17 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களால் தேர்தல் வெற்றியின் போக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லாத் தேர்தல்களிலும் இளம் வாக்காளர்கள் உருவாவது வழக்கம் என்றபோதிலும் தற்போதைய தேர்தல் களம் இதுவரை இல்லாத வகையில் ஒரு மர்மத்தைத் தோற்றுவித்துள்ளது.
காரணம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் இளையர்களின் பங்களிப்பு 20 விழுக்காடாக இருந்தது. ஆனால், அப்போது தேர்தல் களத்தில் தவெக இல்லை. இந்தத் தேர்தலில் இளைய வாக்காளர்கள் தவெக பக்கம் சாயக்கூடும் என்ற கணிப்பு உருவாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விஜய் நடத்தும் கூட்டங்களில் இளையர் கூட்டம் அலைமோதுவதன் அடிப்படையிலான கணிப்பு அது.
கூட்டம் சேருவதை வைத்து வாக்களிப்பைக் கணித்துவிட முடியாது என்று தமிழக அரசியல் களத்தில் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், தற்போது பெருங்கூட்டமாகத் திரளும் விஜய் ஆதரவாளர்களும் அவரது ரசிகர்களும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வாக்களித்தால் தேர்தல் முடிவுகள் வியப்பை ஏற்படுத்திவிடும்.
விஜய்யின் ஆதரவாளர்களும் ரசிகர்களும் 18-29 வயதுப் பிரிவினராக உள்ளது இதர அரசியல் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த அரசியல் உத்தி வகுப்பாளர்களில் ஒருவரான ஜேவிசி ஸ்ரீராம், இளம் வாக்காளர்களின் கணிசமானப் பங்களிப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
“பொதுவாக, முதல்முறை வாக்களிக்கும் இளையர்கள் அரசியலில் ஒரு ‘மாற்றத்தை’ நோக்கியே வாக்களிப்பார்கள். 2021 தேர்தலில் அவர்களின் வாக்குகள் கிராமப் பகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கும் நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கும் பரவலாகக் கிடைத்தன. இம்முறை அவர்களின் வாக்குகள் தவெகவுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது,” என்கிறார் அவர்.
முதல்முறை வாக்களிப்போர் எண்ணிக்கை பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிகமாக இருப்பதும் தேர்தல் முடிவு தலைகீழாக மாறுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள கேரளாவில் 1.6%, மேற்கு வங்காளத்தில் 0.8% என அவர்களின் விகிதம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் அது 2.2% என்பது குறிப்பிடத்தக்கது.

