தென்காசி: தமிழகப் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் இடம்பெற்றிருந்த 2,200 போலி நூல்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு கடந்த டிசம்பரில் 27 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 3,000 நூல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அனுஷா தனுஷ், சூர்யா அனுஷ்கா, அஞ்சலி சூர்யா, நிவேதா அன்பழகன் போன்ற விசித்திரமான பெயர்களில் வெளியிடப்பட்ட ‘அகல் விளக்கு’, ‘ஃபீனிக்ஸ்’ பதிப்பகங்களைச் சேர்ந்த 2,200 நூல்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
வாசகர்களுக்குத் தவறான தகவல்கள் சென்றடைவதைத் தடுக்கும் வகையில் இந்த நூல்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தென்காசி மாவட்டத்தின் பிற கிளை நூலகங்களிலும் தொடர்ந்து கள ஆய்வு நடத்தப்பட்டுப் போலிப் புத்தகங்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் பொது நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அகல்விளக்கு பதிப்பகம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆங்கில நூல்கள்
இதற்கிடையே, கோவை பெரியார் அறிவுலகத்தில் லண்டனைச் சேர்ந்த பிரபலமான ‘வின்டேஜ் பிரஸ் லிமிடெட்’ பதிப்பகத்தின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலி ஆங்கில நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆங்கில நூல்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், போலி ஐஎஸ்பிஎன் (ISBN) எண்கள், போலி முகவரிகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நூல்கள் உருவாக்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பது புதிய புகாராக எழுந்துள்ளது.
கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் ஏறக்குறைய 1,800 போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதை எழுத்தாளர் பெருமாள் முருகன் அண்மையில் அம்பலப்படுத்தினார்.
இதேபோன்று மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், கன்னிமரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பொது நூலகங்களிலும் போலி நூல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை கோவை பெரியார் அறிவுலகத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
