தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணிநீக்கம்

1 mins read
aeeb7a1e-67a5-46bf-9278-cc3a89912aee
23 பேரின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யும் நடவடிக்கையையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். - சித்திரிப்புப்படம்: ஊடகம்

சென்னை: பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்களை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை பதவிநீக்கம் செய்துள்ளது.

23 பேரின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யும் நடவடிக்கையையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மீதான பாலியல் தொல்லைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதும் 238 பள்ளி ஆசிரியர், பணியாளர்கள் மீது பாலியல் புகார்கள் பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக 11 ஆசிரியர்கள் கைதாகி உள்ளனர். 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்களில் 7 பேர் இறந்துவிட்டனர். மற்ற வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 46 ஆசிரியர்கள் மீதான விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

எனினும், இவர்களில் 23 பேர் மீது உரிய ஆதாரங்களுடன் பாலியல் புகார்கள் நிரூபிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவர்களை பணிநீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும், 23 பேரின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்