அட்சய திருதியை நாளில் 25,000 கிலோ தங்கம் விற்பனை

அட்சய திருதியை நாளில் 25,000 கிலோ தங்கம் விற்பனை

2 mins read
050401b8-2ba9-405e-84e6-2f845be58b4f
தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.  - கோப்புப்படம்: நியூஸ் 18

சென்னை: அட்சய திருதியை நாளன்று தமிழகத்தில் 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மொத்த மதிப்பு ரூ.40,000 கோடி.

சட்டமன்றத் தேர்தல் காலம் என்பதால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, ரொக்கமாக ரூ.50,000 பணத்துக்கும் மேல் வெளியே எடுத்துச் செல்பவர்கள், அத்தொகைக்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தேர்தல் பறக்கும் படையினரின் கெடுபிடி காரணமாகப் பல கோடி ரூபாய் ரொக்கப்பணம், தங்க நகைகள், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்தக் கெடுபிடிகளையும் மீறி ஏராளமானோர் அட்சய திருதியை சமயத்தில் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

அன்றைய தினம் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியின்போது 25,000 கிலோ தங்கம் விற்பனையானது.

இந்த ஆண்டு அதைவிட அதிக தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடைகள் பல்வேறு சலுகைகளைப் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தன.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்கி, திங்கட்கிழமை (ஏப்ரல் 20) மாலை வரை அட்சய திருதியைக்கான நல்ல நேரம் நீடித்தது.

இச்சமயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விற்கப்பட்ட விலையைக் காட்டிலும், ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது ரூ.20,000 வரை குறைந்துள்ளது.

விலைகுறைப்பு, அதிரடிச் சலுகைகள், தேர்தல் பறக்கும் படையின் கெடுபிடி எனப் பல்வேறு அம்சங்களுக்கு மத்தியில், தமிழகத்தில் கடந்த இரு நாள்களில் மட்டும் 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாயின.

ஒரு கிலோ தங்கம் 1.50 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே 25,000 கிலோ தங்க நகைகளின் மதிப்பு ரூ.37,500 கோடியாகும்.

கடந்த ஆண்டு விற்பனை மதிப்பு ரூ.24,500 கோடியாக இருந்தது. இப்போது அதை விஞ்சும் வகையில் இந்த ஆண்டு ஒரே அளவில் தங்கம் விற்பனையாகி இருந்தாலும், கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக ரூ.13,000 கோடி அளவுக்கு விற்பனை மதிப்பு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்