சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே பாராட்டும் வகையிலான மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என்றார்.
8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள், 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், 279 வட்டார மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 22 இந்திய மருத்துவத் துறை சார்ந்த மருத்துவமனைகள், 3 பல் மருத்துவக் கல்லூரிகள், 2 பன்னோக்கு மருத்துவமனைகள் என்று 11,876 மருத்துவ கட்டமைப்புகள் தமிழகத்தில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டியலிட்டார்.
மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்போம் திட்டம், பாதம் காப்போம் திட்டம் எனப் பல சிறப்புக்குரிய திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இதுவரை 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.
“கடந்த மாதம் 48 பல் மருத்துவர்களுக்கான தேர்வில் 11,720 பேர் பங்கேற்றனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் 48 பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

