சென்னை: தமிழகத்தில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதிசெய்யவும் ‘போக்ஸோ‘ (POCSO) சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவரும் சூழலில் முதல்வர் இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, குற்றவாளிகள் மீது துரித சட்ட நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்டோருக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளின் நிலவரம் குறித்து நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விரிவாகக் கேட்டறிந்தார். நிலுவை வழக்குகள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் இவ்வழக்குகளை விசாரிக்கத் தேவைப்படும் கூடுதல் நீதிமன்றங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
விசாரணையை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் போக்ஸோ நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
ஏற்கெனவே போக்ஸோ வழக்குகளை விசாரிப்பதற்காக மாநிலத்தில் 22 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன; மேலும் 4 நீதிமன்றங்கள் தொடங்கும் கட்டத்தில் உள்ளன. தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, முதல்வரின் உத்தரவுப்படி 12 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 26 நீதிமன்றங்களை 46.59 கோடி ரூபாய் செலவில் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தின் 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தமாக 52 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும். இந்நீதிமன்றங்கள் போக்ஸோ வழக்குகளை மட்டும் விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுத்தருவதோடு, இதுபோன்ற கொடூரக் குற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்யும்.
இதற்கிடையே, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தற்போது மாநிலத்தில் 11 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்த்துவைக்கும் நோக்கில் முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில் மேலும் 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
