கோவை: குழந்தைகள் மத்தியில், வகை 1 நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இவ்வகைப் பாதிப்பால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஏறக்குறைய 2,600 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், 80 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய் வகை 1 பாதிப்பு என்பது, கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில், செல்கள் மெதுவாக பாதிக்கப்படுவதேயாகும். 80% பாதிப்புக்குப் பிறகே நோயின் தாக்கம் தெரியவரும்.
இவ்வகை பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் வாழ்நாள் முழுதும் முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்கிறார் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு துறை தலைவர் மருத்துவர் சசிகுமார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பாதிப்புடன் வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல், அதிக பசி, எடை குறைதல், உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுகள், வழக்கத்தைக் காட்டிலும் மூச்சு வாங்குதல், வயிற்றுவலி போன்றவை இதன் அறிகுறிகள்.
“பெற்றோர் கவனமுடன் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். பலர் தேவையின்றி மாற்று வழிகளை நாடிவிட்டு, உடல் மோசமான நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். இப்பாதிப்புள்ள குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை இல்லை எனில், கண், நரம்பு, சிறுநீரக பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது,” என மருத்துவர் சசிகுமார் எச்சரித்துள்ளார்.
தேசிய சுகாதார திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் கூறுகையில், ‘நீரிழிவு வகை 1 பாதிப்புக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
‘’குழந்தைகளுக்காக சிறப்பான நிலையான சிகிச்சை முறை வழிகாட்டுதல், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,’‘ என்றும் அவர் கூறியுள்ளார்.

