விருதுநகர்: தமிழ் மொழி தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையைக் கொண்ட மொழி என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதன் மூலம் அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் வந்தது என்ற கோட்பாடு உடைக்கப்பட்டுள்ளது என்றும் விருதுநகரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
அசோகர் காலத்துக்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழினம் தனக்கென தனி எழுத்து முறையை கொண்டிருந்தது என்றும் இலக்கண வளர்ச்சியும் இலக்கியச் செழுமையும் கொண்டிருந்தது தமிழ் மொழி என்றும் அவர் தெரிவித்தார்.
அறிஞர்கள் மட்டுமன்றி, மட்பாண்டத் தொழிலாளியும்கூட எழுத்தறிவு பெற்றிருந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் திகழ்ந்தது என்றார் அவர்.
“கடந்த நான்கு ஆண்டுகளாக இலக்கிய விழாக்களுக்குத் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சாகித்திய அகாடமி விருது பெற்றவர்களுக்கு கனவு இல்லம், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா, பொருநை, வைகை, காவிரி இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் தெரிவித்தார்.