2025ல் விமானங்கள்மீது லேசர் ஒளி வீசப்பட்ட 27 சம்பவங்கள்: சென்னை விமான நிலையம்

1 mins read
fb8412c5-c98e-40fb-8cc7-23ad87c27174
சென்னையில் தரையிறங்கும் விமானங்கள்மீது லேசர் ஒளி வீசப்படும் பல சம்பவங்கள் நிகழ்ந்ததால் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாண்டு விமானங்கள்மீது லேசர் ஒளி வீசப்பட்ட 27 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சென்னை விமான நிலையத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

சென்னையில் தரையிறங்கும் விமானங்கள்மீது லேசர் ஒளி வீசப்படும் பல சம்பவங்கள் நிகழ்ந்ததால் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை விமான நிலையமும் இந்திய விமான நிலைய ஆணையமும் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “இத்தகைய சம்பவங்களால் விமானப் பயணத் துறைக்குப் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இத்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் இந்த விவகாரத்தைக் கடுமையானதாக எடுத்துக்கொள்கின்றனர்,” என்றன.

விமானிகளிடமிருந்தும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், லேசர் ஒளி வீச்சின் மூலத்தைக் கண்காணித்து குற்றம் புரிந்தோருக்கு எதிராக தமிழ்நாட்டுக் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டது.

“இச்சம்பவங்களை மிகைப்படுத்தி பீதியைக் கிளப்பியோர் கூறியதற்கு மாறாக, விமானிகள் நிதானத்துடனும் முழுக் கட்டுப்பாட்டுடனும் செயல்பட்டு நிலவரத்தைக் கையாண்டனர். சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டதுபோல அவசரநிலை எதுவும் இல்லை,” என்று சென்னை விமான நிலையம் கூறியது.

லேசர் ஒளி எங்கிருந்து வீசப்பட்டது என்பது குறித்து துல்லியமாகத் தகவலறிய விமானிகளுடன் இந்திய விமான நிலைய ஆணையம் ஒருங்கிணைக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) நடந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்