சென்னை: சுங்கத்துறையில் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள் உட்பட 273 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம், அதன் சரக்குப் பிரிவு, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, அத்துறையுடன் தொடர்புடைய வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் மீது எழுந்த புகார்கள் தொடர்பாக, அண்மையில் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதல் கெடுபிடி காட்டுவதாக சிலர் குறைகூறினர்.
மேலும், தங்கக்கடத்தல், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களும் எழுந்தன.
இது தொடர்பாக சிலர் நீதிமன்றத்தையும் அணுகினர்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு அண்மையில் மாற்றப்பட்டார்.
இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக, டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பொறுப்பேற்றார். இத்தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது வழக்கமான இடமாற்றம்தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலைய சுங்கத்துறையில் இருந்தவர்கள், விமான நிலைய சரக்கு சுங்கப்பிரிவுக்கும் சென்னை துறைமுகம், ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகம், ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்குப் புதிதாகத் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

