ரூ.28 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு

2 mins read
d23cd8a2-5a42-459b-8aff-3826eea5b429
ஆர்.வைத்திலிங்கம். - படம்: இடிவி பாரத்

ஒரத்தநாடு: சென்னை பெருங்களத்தூரில் 2016ஆம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று அனுமதி கோரியது. அப்போது அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோருக்குச் சொந்தமான முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், பாரத் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முத்தம்மாள் நிறுவனத்திற்குக் கடனாக வழங்கப்பட்டதுபோல கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தில் பல இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டிருப்பதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு சில தனியார் நிறுவனங்கள் வணிகத்துக்காக பாரத் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதுபோல் 27.9 கோடி ரூபாய் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், கடன் பெற்றதாகக் கூறப்படும் முத்தம்மாள் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வணிகம் செய்யவில்லை என வருமானவரித் துறையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், அவருடைய மகன்கள் பிரபு, சண்முகபிரபு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

2011-2016 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ஆர்.வைத்திலிங்கம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவர், 2011 முதல் 2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இப்போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் வடிகால், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதும் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்