டெல்லியிலிருந்து 30 நிமிடங்களில் ஜெய்ப்பூர்; அதிவேகப் போக்குவரத்து சோதனைப் பாதை தயார்

2 mins read
20ae1410-70eb-4ae9-900b-819b5837345f
ஐஐடி சென்னை உருவாக்கியிருக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் பாதை. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: சென்னை ஐஐடி, ரயில்வே அமைச்சுடன் இணைந்து ‘ஹைப்பர்லூப்’ எனப்படும் முதல் அதிவேக போக்குவரத்து சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது.

முதல் சோதனைப் பாதை 422 மீட்டர் நீளம் கொண்டது. இதன் மூலம் 350 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் கடந்துவிட முடியும். அதாவது, டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் தூரத்தை அரை மணி நேரத்திற்குள் கடந்து விடலாம்.

“அரசு - கல்வியாளர்கள் ஒத்துழைப்பு எதிர்காலப் போக்குவரத்தில் புதுமைக்கு வித்திட்டுள்ளது,” என்று தமது எக்ஸ் தளப் பதிவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், சென்னை ஐஐடி வளாகத்தால் உருவாக்கப்பட்டது.

“422 மீட்டர் முதல் பாதை, தொழில்நுட்ப வளர்ச்சியின்கீழ் மேலும் மேம்பாடு காணும். முதல் இரண்டு மானியங்களாக தலா ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக மூன்றாவது மானியமாக மேலும் ஒரு மில்லியன் டாலர் சென்னை ஐஐடி-க்கு வழங்க நேரம் வந்துவிட்டது,” என்றார் அவர்.

முதல் வணிகத் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள ரயில்வே திட்டமிட்டுள்ளது.

‘ஐந்தாவது போக்குவரத்து முறை’ என்று குறிப்பிடப்படும் ஹைப்பர்லூப் என்பது நீண்ட தூர பயணத்திற்கான அதிவேக போக்குவரத்து முறையாகும். இது வெற்றிடமாக உள்ள குழாய்களில் பொருத்தப்பட்ட சிறப்பு உருளைகள் (capsules) வழியாக ரயில்கள் மிக அதிக வேகத்தில் செல்ல அனுமதிக்கிறது.

சாதாரண நாளில் கடல் மட்டத்தில் மணிக்கு 761 மைல் வேகத்தில் பயணிக்கலாம்.

வானிலை பாதிப்பு இல்லாத இந்த ஹைப்பர்லூப் விமானத்தின் வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. குறைந்த எரிசக்தி நுகர்வு, 24 மணி நேரச் செயல்பாடுகளுக்கு ஆற்றல் சேமிப்பு போன்றவை இதன் சிறப்புகள்.

குறிப்புச் சொற்கள்