பட்டாசு விபத்துகளில் சிக்கி 304 பேர் காயம்

1 mins read
6dfd1c34-75a6-4448-ae50-578f0ae7c473
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர், மருத்துவப் பணியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்புகள் விநியோகித்தார்.  - படம்: ஊடகம்

சென்னை: தமிழகம் முழுவதும் பட்டாசு விபத்துகளில் சிக்கி 304 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

பட்டாசு அல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டன என்றும் வியாழக்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி பட்டாசு விபத்துகள் தொடர்பாக 97 அழைப்புகள் வந்தன என்றும் தீயணைப்புத்துறை தெரிவித்தது.

இதற்கிடையே, சென்னையில் மட்டும் பட்டாசு விபத்துகளில் காயமடைந்த 20 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இம்முறை தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் மருத்துவர்கள், தாதியர், மருத்துவப் பணியாளர்களுக்கு இனிப்புகள் விநியோகித்து அவர்களுடன் தேநீர் அருந்தி உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தீபாவளியின்போது பட்டாசு வெடித்து உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை எனக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்