சென்னை: தமிழகத்தில் மக்கள் கோரிக்கைகளுக்கு இணங்கவும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் உயர்மட்ட பாலங்களைக் கட்டுவதற்கு தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
18 மாவட்டங்களில் 1,977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் 177 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்குத் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைகள், உயர்மட்டப் பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், தானியக் கிடங்குகள் போன்றவற்றை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனைத் திறம்படச் செயல்படுத்தி, நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு அரசு விளங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இப்போது உயர்மட்ட பாலங்களைக் கட்டுவதற்கும் ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


