சென்னை: தமிழகத்தில் உள்ள 34 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இக்கல்லூரிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தேசிய மருத்துவ கவுன்சில் கண்டறிந்ததை அடுத்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், ‘ஃபிசியாலஜி’ துறைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வு தொடர்பாக ஆராய குழு அமைக்கப்படவில்லை.
இது குறித்து 34 அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எனவே, உயர்மட்டக் குழுவை அமைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு, என்எம்சி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 34 மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டபோது, சென்னை, கோவை தவிர மற்ற கல்லுாரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை, குறைந்த வருகைப்பதிவேடு உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, இக்கல்லுாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டன. இதில் 24 கல்லூரிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளுக்கு இன்னும் ஒருவார கால அவகாசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் அக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகாது என்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படாது என்றும் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், போதுமான பேராசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தமிழகத்தில் மருத்துவக் கல்வித்தரம் குறைந்துவிட்டதையே காட்டுகிறது என்றும் சில கல்லூரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர் பதவி உயர்வை உரிய நேரத்தில் அறிவித்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்றும் இத்தரப்பினர் கூறுகின்றனர்.


