கோவையில் 4.19 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

கோவையில் 4.19 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

2 mins read
e7cbd698-3659-44ca-bd36-130de6bda282
கோவை மாவட்டம் முழுவதும் 84.72% வாக்குகள் பதிவாகின. - படம்: தினத்தந்தி

கோவை: கோவை மாவட்டத்தில் 4.19 லட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2025) வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணி நடைபெற்றது. இதில் இறந்த வாக்காளர்கள், இரட்டைப்பதிவு என மொத்தம் 6.5 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அது மொத்த வாக்காளர்களில் 20 விழுக்காடு ஆகும். அதன் காரணமாக கோவை மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரித்தது.

கோவை வடக்குத் தொகுதியில் 75 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின. மற்ற ஒன்பது தொகுதிகளிலும் 82 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் பதிவாகின.

குறிப்பாக, கவுண்டம்பாளையம் தொகுதியில் 4 லட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மிகப் பெரிய தொகுதியான இங்கு 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 85 விழுக்காடு ஆகும்.

கோவை மாவட்டம் முழுவதும் 84.72 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

அந்த மாவட்டத்தில் 13,22,759 ஆண்கள், 14,21,179 பெண்கள், 3ஆம் பாலினத்தவர் 534 பேர் என மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

வாக்குப்பதிவின் முடிவில், 11,19,272 ஆண்கள், 12,05,420 பெண்கள், 3ஆம் பாலினத்தவர்கள் 319 பேர் என மொத்தம் 23 லட்சத்து 25 ஆயிரத்து 11 பேர் வாக்களித்திருந்தனர். இதன் மூலம் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்