திமுக ஆட்சியில் 4,000 குடமுழுக்குகள்: ஸ்டாலின்

1 mins read
30a99cfa-6c7e-40e0-9b9e-0b5a98df51a7
முதல்வர் ஸ்டாலின். - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: நடப்பு திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பல்வேறு கோவில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழாக்களைப் பட்டியலிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து 1,728 நாள்களில் இந்தக் குடமுழுக்குகள் சிறப்பாக நடைபெற்றன. ஆயிரமாவது குடமுழுக்கு சென்னையில் உள்ள காசி விசுவநாதர் திருக்கோவிலில் நடைபெற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த 2023ல், இரண்டாயிரமாவது குடமுழுக்கு மயிலாடுதுறை கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவிலிலும் 3,000வது குடமுழுக்கு 2024ல் நாகையில் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவிலிலும் நடைபெற்றன.

“கடந்த 2025ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில் 4,000வது குடமுழுக்கு நடைபெற்றது,” என்று திரு ஸ்டாலின் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு சாதனை தமிழக வரலாற்றில் இல்லை என்றும் மதவாத அரசியல் செய்வோர்க்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாதிரி ஆட்சியின் முழக்கம் என்றும் தமிழகம் தலைகுனியவிடப் போவதில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்