சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழக மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை திமுக அரசு வழங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திமுக அரசு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற லட்சியத்துடன் செயல்படுகிறது.
“இந்தியாவின் பிற மாநிலங்களும் கொள்கை ரீதியாக நமக்கு எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக உயர்த்தியிருக்கிறோம்.
“பூச்சாண்டிகளைப் பார்த்து மிரள்வதற்கு திமுக அடிமைக் கட்சியல்ல. இது தன்மானமும் துணிச்சலும் கொண்ட, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்,” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1,244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன்.
“திமுக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும். ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட, அரை நிமிடக் காணொளிகள், ‘ரீல்ஸ்கள்’தான் லட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

