தமிழகத்தில் 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது

தமிழகத்தில் 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது

படம்: தினத்தந்தி

11 Nov 2026 - 8:59 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 443 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் நிகழ்ந்த கொலைச் சம்பவங்கள், தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, காவல்துறைத் தலைவர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் நவம்பர் 9, 10 இரு நாள்களும் மாநிலம் தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது.

இச்சோதனையின்போது, 8,626 குற்றப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் நீதிமன்றப் பிடியாணை நிலுவையில் இருந்த 443 ரவுடிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். 796 பேர் மீது நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டு தீவிரக் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 77 பேரும், பழிவாங்கும் நோக்கிலான குற்றங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 167 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆளில்லா வானூர்தி கேமராக்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பொது இடங்களில் மது அருந்தியதாக 1,859 வழக்குகள் பதியப்பட்டு 195 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,865 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே, சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சு அறிக்கை கோரியுள்ள சூழலில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் புதன்கிழமை (நவம்பர் 11) அவசர ஆலோசனை நடத்தினார்.

குற்றவாளிகள் மீது தயவின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுகாவல்துறைகுண்டர்கும்பல்கைதுநடவடிக்கைகொலைதீபாவளி