சென்னை துறைமுகத்தில் 46,000 சீனப் பட்டாசுகள் பறிமுதல்

சென்னை துறைமுகத்தில் 46,000 சீனப் பட்டாசுகள் பறிமுதல்

2 mins read
0ac254b4-6c93-4f6d-9d22-f72b6bc25575
விரிவான சோதனையின்போது 46,000க்கும் மேற்பட்ட பட்டாசுகள், வான வேடிக்கைப் பொருள்கள் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. - படம்: நியூஸ் ஆன் ஏர்
Google News Preferred Icon

சென்னை: சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பட்டாசுகளை சென்னையில் வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை துறைமுகத்தில் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது பட்டாசுகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் இருந்து ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்திவரப்படுகின்றன. இதனால் இந்தியப் பட்டாசு உற்பத்தியாளர்களும் பட்டாசு ஆலை தொழிலாளர்களும் வருவாய் இழப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், பல்வேறு நூதன முறைகளைப் பின்பற்றி கடத்தல்காரர்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை இந்தியாவுக்குள் கடத்தி வருகின்றனர். பின்னர் அவை கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. இதையடுத்து கடத்தலை முறியடிக்கும் வகையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் கப்பலில் சென்னை துறைமுகம் வழியாக இந்தியாவுக்குள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்குநகர அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துறைமுகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீனாவில் இருந்து வந்த 40 அடி நீளமுள்ள கொள்கலன்கள், அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அவற்றில் தெளிப்பான்கள் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், விரிவான சோதனையின்போது 46,000க்கும் மேற்பட்ட பட்டாசுகள், வாணவேடிக்கைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, மேலும் ஓர் உளவுத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட 18.7 மெட்ரிக் டன் பட்டாசுகளைக் கடத்தி வந்த கடத்தல் கும்பல் ஒன்றை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்
சீனாபட்டாசுசென்னைதுறைமுகம்புலனாய்வுவருவாய்பறிமுதல்