சென்னை: இம்மாதம் 27ஆம் தேதி சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி தொடங்கவுள்ளது.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் (பபாசி) நடத்தப்படும் அக்கண்காட்சியைத் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசும் இணைந்து தொடங்கிவைக்க உள்ளனர்.
முந்தைய ஆண்டுகளில் பொங்கல் திருநாள் விடுமுறைக் காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. ஆனால், பொங்கல் விடுமுறையை ஒட்டி பெரும்பாலோர் சொந்த ஊருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றுவிடுவதால் விற்பனை மந்தமடைகிறது.
அதனால், இவ்வாண்டு முதல் சென்னைப் புத்தகக் கண்காட்சியை டிசம்பர் இறுதியில் தொடங்கி, பொங்கல் திருநாளுக்கு முன்னரே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதிவரை இடம்பெறும் என பபாசி அறிவித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் நடக்கும் கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. எல்லாப் புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் கண்காட்சி இடம்பெறும்.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் எழுத்தாளர்களுக்கு ‘கலைஞர் பொற்கிழி’ விருதுகளைத் திரு உதயநிதி வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.