காதலி உட்பட ஐந்து பேரைக் கொலை செய்த இளைஞர்

2 mins read
1bc50e7b-a6de-41be-99d5-79a2a264c192
கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற அஃபான். - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: காதலி உட்பட தனது சொந்த குடும்பத்தினர் ஐந்து பேரைக் கொலை செய்ததாகக் கூறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அஃபானை கேரள மாநில காவலர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர் சொன்ன இடங்களில் சென்று விசாரித்த போது அவரின் சகோதரன் அஃப்சான் (13), பாட்டி சல்மா பீவி (88), அஃபானின் காதலி ஃபர்சானா (19), அவரது மாமா லத்தீஃப் (69), அத்தை ஷாஹிதா (59) என மொத்தம் ஐவரை வேறு வேறு இடங்களில் வைத்து கொலை செய்தார்.

திருவனந்தபுரம் காவலர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது தாயார் ஷெமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை செய்யப்பட்ட ஃபர்சானாவின் சகோதரர் பேசுகையில், அவரது குடும்பத்தினர் அஃபானுக்கு ஃபர்சானாவைத் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அஃபான் தன் வீட்டிற்கு இரு நாள்களுக்கு முன் ஃபர்சானாவை அழைத்துச் சென்றபோது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, நிதிப் பிரச்சினைதான் இந்தக் கொலைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் காவல்துறையினர் அஃபான் போதைக்கு அடிமையானதால் கொலை செய்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஃபானிடம் விசாரணைக் குழு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வாக்குமூலம் பெற்றது.

குறிப்புச் சொற்கள்