தூத்துக்குடி: மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசாவை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வியாழக்கிழமை இரவு தூத்துக்குடித் தனியார் கொள்கலன் முனையத்தில் வந்திறங்கிய சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.
ஆவணங்களில் அந்தக் கொள்கலனில் சுண்ணாம்புத் தூள் (கால்சியம் கார்பனேட்) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகள் அதனைத் திறந்து சோதனையிட்டபோது, முன்னால் அடுக்கப்பட்டிருந்த சுண்ணாம்புத் தூள் மூட்டைகளுக்குப் பின்னால் சுமார் 5 டன் எடையுள்ள கசகசா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கசகசாவின் செடி, காய், பிசின், தண்டு என அனைத்தும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி பெற்ற மருந்து நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் மட்டும், இதை பயிரிட முடியும். இந்தியாவில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும், கசகசா பயிரிட அரசு அனுமதியளித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும், மத்திய அரசு அதிகாரிகள், கலால் மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் அதனைப் பயிரிட வேண்டும்.
