குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தில் இருந்து 50 பேர் தேர்ச்சி

1 mins read
6e38a6e6-94b3-4024-806b-7181e0c3fa60
முதலாம் இடத்தைப் பிடித்த சிவசந்திரன். - படம்: ஊடகம்

சென்னை: இந்திய குடிமைப் பணித் (சிவில் சர்வீஸ்) தேர்வில், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற பட்டதாரி முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு இந்திய அளவில் 23ஆம் இடம் கிடைத்துள்ளது.

சிவச்சந்திரன், தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் இத்தேர்வுக்கான பயிற்சியைப் பெற்றவர் என்பது பெருமை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட ‘சிவில் சர்வீஸ்’ பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் இம்முறை 1,009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் சிவச்சந்திரனும் ஒருவர்.

கடந்த 2024ஆம் ஆண்டில் 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16ஆம் தேதி நடைபெற்றது. ஏறக்குறைய 5.83 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 14,627 பேர் அடுத்த கட்டத்துக்குத் தேர்வாகினர். இரண்டாம் கட்டத் தேர்வில் 2,845 பேர் தேர்ச்சி பெற்றனர்.

பின்னர் டெல்லியில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சக்தி துபே முதலிடம் வகித்தார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 50 மாணவர்கள் இம்முறை குடிமைப் பணிகளுக்குத் தேர்வாகி உள்ளனர். அவர்களில் பி.சிவச்சந்திரனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இவர் தேசிய அளவில் 23வது இடத்தைப் பெற்றார்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 134 பேர் நேர்காணல் தேர்வுக்கு சென்றதில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்