சென்னை: தமிழக அரசின் 50 சேவைகளை ‘வாட்ஸ்அப்’ மூலம் பெற வகைசெய்யும் ஒப்பந்தம், தமிழகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) கையெழுத்தானது.
இதன்மூலம், குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு, வருமானச் சான்றிதழ்கள், வரி செலுத்துதல், வணிக உரிமங்கள், அரசுப் பேருந்து சீட்டுக்கான முன்பதிவு போன்ற பல சேவைகளை ‘வாட்ஸ்அப்’ வழி அம்மாநில மக்கள் பெற முடியும்.
அச்சேவைகளை வழங்குவதற்காகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘சாட்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின்னணு ஆளுமை முகவை இந்த ‘வாட்ஸ்அப்’ அடிப்படையிலான சேவையை அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு சேவையைப் பெறவும் பல்வேறு அலுவலகங்களுக்கும் மக்கள் அலைவதை இத்திட்டம் தடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மக்களை மையமாகக் கொண்ட உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் மின்னிலக்க மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையைத் தமிழக அரசு கொண்டிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
“வாட்ஸ்அப்’ என்பது இந்திய மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சமூகத்தளமாகும். மேலும், அரசுச் சேவைகளுக்கான மின்னிலக்கப் பயன்பாட்டை வழங்கும் சிறந்த தளமாக அது இருக்கும்,” என இந்தியாவுக்கான மெட்டாவின் வணிகப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறினார்.
குறைந்தபட்சம் 13 அரசுத் துறைகளை உள்ளடக்கிய இத்திட்டத்தின் வழி ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி ‘வாட்ஸ்அப்’ எண்கள் ஒதுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முதல்கட்டமாக, அடுத்த மூன்ற்உ மாதங்களில் 50 சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க தமிழக மின்னணு ஆளுமை முகவை திட்டமிட்டுள்ளது.

