நெய்வேலியில் 500 ஏக்கர் பயிர், விருத்தாசலத்தில் 5,000 நெல் மூட்டைகள் பாழ்

தமிழகத்தில் பல இடங்களில் கனமழை, வெள்ளம்

நெய்வேலியில் 500 ஏக்கர் பயிர், விருத்தாசலத்தில் 5,000 நெல் மூட்டைகள் பாழ்

படம்: தினமணி

23 Oct 2026 - 8:47 pm

2 mins read

நெய்வேலி: தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே பெய்த கனமழையால் என்எல்சி நிறுவனத்தின் மண் மேட்டிலிருந்து கரைந்து வந்த கழிவுமண், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் படிந்து பயிர்களைப் பாழ்படுத்தியுள்ளது.

அப்பகுதியிலுள்ள கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில், சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மட்டு மண் கரைந்து, நடவு செய்யப்பட்டிருந்த நெல் வயலின் அடியில் படிந்துள்ளதால் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

சு.கீணனூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
சு.கீணனூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள். - படம்: தினமணி

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏக்கருக்கு 35,000 ரூபாய் வரை செலவு செய்த பயிர்கள் பாழானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

“என்எல்சி இந்தியா நிா்வாகம் வடிகால் வாய்க்கால் சரியான முறையில் அமைக்காததே இதற்குக் காரணம். எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் பாதிப்பைச் சந்தித்து வருகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

“டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப்போல மழைப் பாதிப்பு காலத்தில் கம்மாபுரம் ஒன்றியம், என்எல்சி இந்தியா நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,” என்று அவர்கள் கோரினர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

விருத்தாசலம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் டி.வி.புத்தூர் பகுதியில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழை 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழானதால் அங்கு உடனடியாக நிரந்தர நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள கிராமங்களில் வடிகால் வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், மழைநீருடன் விவசாயக் கழிவுநீரும் சேர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால், வியாழக்கிழமை கனமழையில் வீடுகளுக்குள் நீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால், வியாழக்கிழமை கனமழையில் வீடுகளுக்குள் நீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். - படம்: மாலைமலர்

அதனால் வீடுகளுக்குள் நீர் தேங்கி மக்கள் முடங்கியதுடன், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் நீரில் மூழ்கின. மழைக்காலம் தீவிரமடைந்துள்ளதால், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாகத் தேங்கியுள்ள நீரை அகற்றி வடிகால்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சிவப்பு எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கையும் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுமழைபாதிப்புபயிர்நெல்வெள்ளம்