சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபர் 17) முதல் பெய்த தொடர் கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போலப் பாய்ந்தோடியது. இதையடுத்து, 15,000 ஊழியர்களும் 500 டிராக்டர்களும் பயன்படுத்தப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீ.க்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும் (11.5 செ.மீ.க்கு மேல்) பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 36.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராயபுரம் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்துகள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
ராயபுரம் தவிர திருவொற்றியூர், பெரியார் நகர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்திருந்தது.
இப்போது, அனைத்து முக்கிய பேருந்து வழித்தடச் சாலைகளிலும், மழைநீர் தேங்கிய பெரும்பாலான தெருக்களிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. தாழ்வான ஒரு சில பகுதிகளில் மட்டும் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொறுப்பு அமைச்சர்கள் சென்னை வருமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக எட்டு பேரை முதல்வர் விஜய் நியமித்தார்.
ரமேஷ், லோகேஷ் தமிழ்ச்செல்வன், அருண் ராஜ், விஜய பாலாஜி, பிரபு, ஆலந்தூர் விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக உள்ளனர்.
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சென்னையில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாள் முழுவதும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மழை பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு நடக்கின்றன என்பதைப் பார்வையிட ரிப்பன் மாளிகையில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மையம், அவசரக் கட்டுப்பாட்டு அறையை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
