சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை கிராமத்தில் சம்மந்த மூர்த்தி, 42, என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டுத் தோட்டத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நள்ளிரவு நேரத்தில் முதலை ஒன்று புகுந்துவிட்டதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின்படி, சிதம்பரம் வனச்சரக அலுவலர் கோ.வசந்த்பாஸ்கர், சிதம்பரம் பிரிவு வனக் காப்பாளர்கள் கு.பன்னீர் செல்வம், த.அன்புமணி, புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தொடர்ந்து வீட்டுத் தோட்டத்தில் புகுந்த ஏறக்குறைய 13 அடி நீளமுள்ள 550 கிலோ எடையுள்ள முதலையைக் கவனமாகப் பிடித்த அவர்கள், அதனை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்த் தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனர்.