சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையில் காவல்துறையினர் இரவு சுற்றுக்காவலில் ஈடுபடுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது; சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பவர்கள் உட்பட 59 வயதைத் தொட்ட அதிகாரிகளும் அப்பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வயது மூப்பைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு இரவுச் சுற்றுக்காவல் பணியிலிருந்ருது காவல்துறை ஆணையர் ஏ. அருண் விலக்களித்துள்ளார் என்று தந்தி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சென்னை காவல்துறையில் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவிருக்கும் 59 வயதைத் தொட்ட எல்லா அதிகாரிகளுக்கும் இரவுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக காவல்துறை ஆணையர் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் 59 வயதைத் தொடும் காவல்துறையினர் அனைவருக்கும், அவர்கள் ஓய்வுபெறும் நாளளுக்கு ஓராண்டு காலத்துக்கு முன்பு இரவுப் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

