துப்புரவுப் பணியாளர்கள் நலன்காக்க 6 சிறப்புத் திட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

2 mins read
81c974c0-1418-4d10-8da1-8d475d9decee
சென்னை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் 13 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து கோயம்புத்தூர் துப்புரவுப் பணியாளர்கள் வியாழக்கிழமை (14.8.2025) கோயம்புத்தூர் நகராட்சிக் கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை நகர காவல்துறையினர் அப்புறப்படுத்தி, தடுத்து வைத்தனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் துப்புரவுப் பணியாளர்களின் நலன் காப்பதற்கு ஆறு சிறப்புத் திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. வியாழக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டங்கள் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த துப்புரவுப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு அதிமுக, கம்யூனிஸ்டு கட்சி, தேமுதிக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இந்நிலையில், துப்புரவுப் பணியாளர்கள் நலனுக்காக 6 திட்டங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், “துப்புரவுப் பணியாளர்களின் நலனைக் காப்பதில் தமிழ் நாடு அரசு உறுதியாக உள்ளது. துப்புரவுப் பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாகச் செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது,” என்று கூறினார்.

6 நலத் திட்டங்கள்

1) துப்புரவுப் பணியாளர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தொழில் சார் நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது.

2) பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.

3) பணியாளர்களின் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.3,50,000 மானியமாக வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்த ஏதுவாக 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.

4) பணியாளர்களின் குழந்தைகளுக்குப் புதிதாக உயர்கல்வி உதவித் தொகை.

5) சொந்த வீடில்லாத பணியாளர்களுக்கு 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

6) நகர்ப்புறத் துப்புரவுப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

வழக்கறிஞர்கள் கைது; நீதிமன்றத்தில் முறையீடு

இந்த நிலையில், துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரைக் காணவில்லை என்றும் போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்