சென்னை: கடந்த ஆட்சிக் காலத்தில் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 600 வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஏறக்குறைய 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், பேரவை விதி எண் 110ன்கீழ் முதல்வர் விஜய் இதுகுறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அமைதி வழியில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அவர் உறுதி அளித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும்விதமாக, கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறியப்பட்டன.
உரிய சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைக்குப் பிறகு, இந்த 600 வழக்குகளையும் திரும்பப் பெற அரசு அதிகாரபூர்வ ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் சுமார் 92,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் சட்டச் சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர். அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
