தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுகவில் புதிதாக இணைந்த 77 லட்சம் பேர்: ஸ்டாலின் தகவல்

1 mins read
6e30dcc4-9b3a-4b3e-aab6-78439fd66a03
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: மக்களின் ஆதரவு பெருகப் பெருக, திமுகவுக்கு பொறுப்பும் கடமையும் கூடுகிறது எனத் தமிழக முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு அதிகமாகி வருவதால் அதனைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், திமுகவில் புதிதாக 77 லட்சம் பேர் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னையில் திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், இடையூறுகள், அவதூறுகள் எதுவாயினும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது திமுக என்றார்.

“திமுக நிர்வாகிகள் மக்களைச் சந்திக்கும்போது பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும். எந்தவிதச் சுணக்கமும் இன்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து தமிழக மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று குறிப்பிட்ட அவர், இதை தமிழக மக்கள் உறுதி செய்யும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் புதிதாக 77 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்றும் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்