சென்னை: தமிழ்நாட்டில் உடலுறுப்பு வேண்டி 7,815 பேர் பதிவுசெய்து காத்திருப்பதாக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முரளி, 59, என்பவரின் உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 250ஆவது மனிதர் திரு முரளி என்பது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து, தமிழக அரசு சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “உடலுறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு உடலுறுப்பு தானம் தொடங்கப்பட்டது. இதுவரை மூளைச்சாவு அடைந்த 250 பேர் தங்களது உடலுறுப்புகளை தானமாக வழங்கி உள்ளனர். ஒட்டுமொத்தத்தில், இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,976 பேர் உறுப்புதானம் செய்துள்ளனர்,” என்று சொன்னார்.
தமிழக அரசின் அரசு மரியாதை அறிவிப்பு உறுப்பு தானத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் கண்டு, ஒடிசா, ஆந்திர மாநிலங்களும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெறும் வசதிகள் 39 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் 7,815 பேர் உறுப்புகளுக்காகப் பதிவுசெய்து காத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அவர்களுள் ஆக அதிகமாக 7,137 பேர் மாற்றுச் சிறுநீரகங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துக் கல்லூரி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் மதுரை, கோவை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அவ்வசதி தொடங்கப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘குரங்கம்மைத் தொற்று இல்லை’
இதனிடையே, தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மைத் தொற்று கண்டறியப்படவில்லை என்று திரு மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில், டெங்கிக் காய்ச்சலால் இதுவரை ஐவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.