சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து, காவல்துறை கைது செய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்ளாதேஷ் குடிமக்கள் எட்டு பேர் பிடிபட்டுள்ளனர். வடமாநிலத்தினர் என்ற போர்வையில் தங்கியிருந்த அவர்கள் அனைவரும் கைதாகினர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 138ஆக அதிகரித்துள்ளது.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ளது அகரமேல் கிராமம். இங்கு பங்ளாதேஷைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அண்மையில், சென்னை குன்றத்துார், மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாகப் பதுங்கியிருந்த பங்ளாதேஷ் குடிமக்கள் 33 பேரைக் காவல்துறை கைது செய்தது. அவர்களில் 25 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், எட்டு சிறார்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மேலும் பலர் இவ்வாறு தங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

