மதுரை: தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்குப் போலிப் பதிவு எண்களுடன் தரமற்ற புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள நூலகத்திலும் 800 போலிப் புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, கோவையில் தந்தை பெரியார் பெயரில் உள்ள நூலகத்தில் ‘அகல்விளக்கு’, ‘பீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களின் பெயரில் போலிப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, மதுரை நூலகத்திலும் குறிப்பிட்ட பதிப்பகங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் குறித்துத் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், புத்தகங்களுக்கான அனைத்துலகத் தரக்குறியீட்டு எண் அடிப்படையில் சோதனை நடத்தியபோது, ‘பீனிக்ஸ்’ பதிப்பகத்தின் பெயரில் 800 போலிப் புத்தகங்கள் இருப்பது உறுதியானது.
காப்புரிமையற்ற புத்தகங்களின் தலைப்புகளையும் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களையும் முறைகேடாகப் பயன்படுத்தித் தரக்குறியீட்டு எண் பெற்று, இப்புத்தகங்களை அச்சிட்டு நூலகத்திற்கு வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2022-23ஆம் நிதியாண்டில், திமுக ஆட்சிக்காலத்தில் இப்புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி சர்ச்சையைத் தொடர்ந்து, ‘பீனிக்ஸ்’ பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்பேரில், ஆங்கிலம், அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 356 தலைப்புகளின்கீழ் வைக்கப்பட்டிருந்த 800 புத்தகங்களை நூலக நிர்வாகம் மொத்தமாக அப்புறப்படுத்தியுள்ளது.
எனினும், மதுரை நூலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் புத்தகங்கள் ஏதும் இல்லை என நூலக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
