சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 944 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்,
மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.2.56 கோடி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கவும் தமிழகத்தை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு என்றும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அமைச்சர் சிவி கணேசன் கேட்டுக்கொண்டார்.
மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு துறைகளின் வாயிலாக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


