திருப்பூர்: இந்தியப் பிரதமர் மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பை கண்டுபிடித்தால், ரூ. 99 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் திருப்பூரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழக பாஜக சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து இதுகுறித்து தெளிவுபடுத்தி கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக செயலர் கார்த்தி, ஆன்மிகப் பிரிவு மாவட்ட துணை தலைவர் ஓசை சிவா ஆகியோர் சார்பில் திருப்பூரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால், ரூ 99 லட்சம் பரிசு வழங்கப்படும். முதல் மொழி - தமிழ்வழிக் கல்வி கட்டாயம், இரண்டாம் மொழி - ஆங்கிலவழிக் கல்வி, மூன்றாம் மொழி - மாணவர்களின் விருப்பத் தேர்வு. திமுக மந்திரி மகனுக்கு கிடைக்கும் கல்வி ஏழை எளியவர்களின் மகனுக்கும் கிடைக்கக்கூடாதா? சிபிஎஸ்இ பள்ளியில் கிடைக்கும் கல்வி அரசுப் பள்ளி மாணவனுக்கு கிடைக்கக்கூடாதா?’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

