‘மேட்ரிமோனி’ தளத்தில் ஆதார் சரிபார்ப்பு: தமிழக அரசு அனுமதி

‘மேட்ரிமோனி’ தளத்தில் ஆதார் சரிபார்ப்பு: தமிழக அரசு அனுமதி

கோப்புப் டம்: இந்து தமிழ் திசை

25 Sep 2026 - 6:25 pm

1 mins read

சென்னை: மேட்ரிமோனி எனும் திருமண இணையத்தளப் பயனர்களின் அடையாளத்தை ஆதார் மூலம் சரிபார்க்கத் தமிழக அரசு தற்போது புதிய அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

திருமணம் தொடர்பான மோசடிகள், ஆள்மாறாட்டங்களைத் தடுக்கும் நோக்கில் சமூக நலத் துறைச் செயலர் மு.பல்லவி பல்தேவ் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இணையத்தளப் பயனர்களின் அடையாளத்தை உறுதிசெய்து நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் திருமண மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனர்களின் சுயவிவரங்களில் ‘சரிபார்க்கப்பட்ட பயனர்’ என்பதைக் குறிக்கும் வசதியை மேட்ரிமோனி நிறுவனங்கள் தங்களது இணையத்தளங்களில் இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆதார் சரிபார்ப்பு முறை முற்றிலும் தன்னார்வ அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாணையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

ஆதார் எண்ணைப் பயன்படுத்திச் சரிபார்ப்பை மேற்கொள்ளும் முன்பு, சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலை மேட்ரிமோனி நிறுவனங்கள் கட்டாயமாகப் பெற வேண்டும்.

ஆதார் சரிபார்ப்பை மறுக்கும் அல்லது செய்ய முடியாத பயனர்களுக்கு மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி ஆதார் அட்டைக்கு மாற்றாக ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, பான் அட்டை போன்ற மாற்று அடையாள ஆவணங்களைப் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆதார் சரிபார்ப்பைச் செய்ய மறுக்கும் காரணத்திற்காக எந்தவொரு பயனருக்கும் சேவையை மேட்ரிமோனி நிறுவனம் மறுக்கக் கூடாது என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

மேட்ரிமோனி நிறுவனத்தில் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கும் இந்த நடவடிக்கை தற்போது முறைப்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திருமணம்ஆதார்அரசாணைமாநில அரசு