சென்னை: தன்னைப் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு காலம் பதில் சொல்லும் என ரஜினிகாந்த் பதிலடி தந்துள்ளார்.
இதனிடையே, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ரஜினி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இல்லையெனில், விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் தவெக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டபோது திமுக அவரை மிரட்டியதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், திமுகவின் மிரட்டல் காரணமாகவே, ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்றும் கூறினார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா தனது பேச்சுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாமக்கல், திருச்செங்கோட்டில் ரஜினி ரசிகர்கள் பல்வேறு இடங்களில் ஆதவ் அர்ஜுனாவைக் கண்டித்து பதாகைகள் வைத்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி ரசிகர்கள் தேர்தல் களத்தில் தவெகவுக்கு எதிராகச் செயல்படுவார்கள் என அந்தப் பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, ரஜினிகாந்த் குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினியும் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா அண்மையில் தன்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பதாக ரஜினி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“அவருடைய (ஆதவ்) அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி.
“காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்,” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

