தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவிரிக் கரையோரங்களில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்

2 mins read
d6419aa5-c36e-40a0-a8fd-f2556e2b271b
வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு தமிழகத்தின் நீர்நிலைகளில் பெரிய அளவில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர், திருவையாறு, திருச்சி காவிரி நதியோடும் பகுதிகள், சேலம் மாவட்டம் மேட்டூரில் அணையின் மட்டம் பகுதி என பல இடங்களிலும் ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவித்துக்கொண்டனர்.

மூத்தோர்களிடம் ஆசிபெற்ற புதுமணத் தம்பதிகள், தங்கள் திருமண மாலைகளை ஆற்றில்விட்டு, தாலியைப் பிரித்து கோத்து காவிரி அண்ணைக்கு படைத்து அணிந்து கொண்டனர்.

ஓடும் நீரில் புதுமனத் தம்பதியினர் தங்களது திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வளரும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் நீராட்டிற்காக கொள்ளிடக் கரையில் எழுந்தருளினார்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் நீராட்டிற்காக கொள்ளிடக் கரையில் எழுந்தருளினார். - படம்: தமிழக ஊடகம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் அணையின் மட்டம் பகுதியில் மக்கள் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து காவிரியில் மூழ்கி புனித நீராடினர்.

அணை முனியப்பனுக்கு பொங்கலிட்டு ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

குடும்பத்துடன் ஆடிப்பெருக்கைக் கொண்டாடும் மக்கள்.
குடும்பத்துடன் ஆடிப்பெருக்கைக் கொண்டாடும் மக்கள். - படம்: தமிழக ஊடகம்

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீர்நிலைகளில் ஏராளமான மக்கள் ஆடிப்பெருக்கைக் கொண்டாடுவதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் காவிரி ஆற்றில் இருந்தனர்.

காவிரி ஆற்றில் நீராட வரும் பெண்களுக்கு உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்