சென்னை: தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு உரமேற்ற வேண்டும் என்றும் அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைக்க வேண்டும் என்றும் கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சித்தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெகவின் மாநில மாநாடு, கடந்த 1967, 1977 தேர்தல் வெற்றிகளால் ஏற்பட்ட விளைவுகளை, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக நிகழ்த்திக் காட்டப்போவது நிச்சயம் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும். மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு.
“மதுரையில் நடந்த மாநில மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. கபட நாடகம் மற்றும் பிளவுவாத சக்திகளை அரசியல் மற்றும் கொள்கை அளவில் நின்று உறுதியாக நாம் எதிர்த்ததை கடல்கள் சேர்ந்து கை தட்டியதைப் போல மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றது, மனத்தில் கல்வெட்டாக பதிந்தது,” என்று விஜய் மேலும் கூறியுள்ளார்.

