சென்னை: காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் முதன்முதலில் காவல் ஆணையம் அமைக்கப்பட்டது என்றார்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 17,000 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சிதான் காவல்துறையின் பொற்காலமாக அமைந்துள்ளது என்றார்.
“காவல்துறையினருக்கு ஏராளமான கடமைகள் உள்ளன. குற்றங்களைக் குறைப்பது என்பதைவிட குற்றங்களே நடைபெறாமல் பார்த்துக் கொள்வதுதான் சாதனை.
“தற்போதைய சூழலில் உங்கள் முன் இணையக் குற்றங்கள், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பது ஆகிய கடமைகள் உள்ளன. உங்களை நாடி வரும் பொதுமக்களிடம் கனிவாகப் பேசி அவர்கள் குறைகளைக் கேட்க வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காவல்துறையினருக்கு சமூகநீதிப் பார்வையும் மதச்சார்பின்மையும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், சாதிய பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.


