சென்னை: தமிழகத்தில் உள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்திடும் திட்டம் தமிழக வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதை வரவேற்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் சுவடிகளையும் மின் பதிபாக்கம் செய்ய வேண்டும் என்று ஓர் அறிக்கையில் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகங்களிலும் அந்நாடுகளின் தேசிய நூலகங்களிலும் பல்லாயிரக்கணக்கான பழம் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருவதாக நெடுமாறன் சுட்டிக்காட்டி உள்ளார்.
அந்த ஓலைச்சுவடிகளின் காலம் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்றும் அவற்றையெல்லாம் உடனடியாக மின் பதிப்பாக்கம் செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து சேமித்து வைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் நெடுமாறன்.
“தமிழக ஆய்வாளர்கள் இவற்றை ஆய்வு செய்வதற்கு உதவ வேண்டும். இதன்மூலம் இதுவரை கிடைக்காத பழந்தமிழ் நூல்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உருவாகும்.
“எனவே, மின் பதிப்பாக்கம் செய்யும் திட்டத்தை உலக நாடுகளுக்கும் விரிவாக்க வேண்டும் என தமிழக முதல்வரையும் நிதியமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன்,” என பழ.நெடுமாறன் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


