சென்னை: தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு செய்துள்ளது.
மார்ச் 12ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டதாக மாலை மலர் ஊடகச் செய்தி தெரிவித்தது.
மாநகராட்சிக் கவுன்சிலர் தங்கள் வார்டுகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள் குறித்து விவரம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர்ப் பலகையை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், சென்னை பாரிமுனை, சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பெயர்ப் பலகைகளில் ஆங்கிலம், இந்தி எழுத்துகள் பெரிதாகவும் தமிழ் எழுத்துகள் சிறிதாகவும் உள்ளன.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, முதற்கட்டமாக விதிமீறிய கடைகளுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் பெயர்ப் பலகைகளை சரிசெய்யவில்லை என்றால் அக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.
கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும் இதேபோல் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.