சிவகங்கை: தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய பழனிசாமி, வீட்டிலிருந்த அஜித்குமாரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அருகில் இருந்த அஜித்குமாரின் தாயாருக்கும் சகோதரர் நவீன்குமாருக்கும் ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
“அஜித்குமார் கொலையில் தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
“அதற்கான முழுப் பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
“தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. தங்கம், வெள்ளி நிலவரம்போல கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
“உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
“அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அஜித்குமாரின் சகோதரருக்கு விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும். அவரது குடும்பத்திற்கு அதிமுக துணை நிற்கும்.
“அதிமுக போராடியதால்தான் திமுக அரசு வேறு வழியின்றி அஜித்குமார் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரால் உயிர் பறிபோயுள்ளது. காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார்? என்று தெரியவேண்டும்.
“திமுக ஆட்சியில் இதுவரை 20 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன,” என்று பழனிசாமி கூறினார்.