சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பான வழக்குகளில் மட்டும் தமிழகத்தில் 2,117 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 107 பேர் பெண்கள் என்றும் 2,010 பேர் ஆண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக நடக்கும் போதைப்பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்க, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், அமலாக்கப் பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவும் இவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இப்பணிக்காக, இத்துறையில் உளவு தகவல்களைச் சேகரிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இப்பிரிவினர் போதைப் பொருள் கடத்தல், விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல் போன்ற பணிகளிலும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுதும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க, நிரந்தர சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 45 சோதனை சாவடிகளில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நான்கு ஆண்டுகளில் கைதானோர் விவரங்களையும் வெளியிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து புகார்கள் அளிக்க சிறப்பு எண்கள் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.